ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட முதல் ஐந்து நாடுகள் மீது, தண்டனைக்குரிய வரிகளை விதிக்க முற்படும், ரஷ்யா மீதான தடைகள் மசோதாவில்
ஈரானையும் சேர்க்குமாறு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று குடியரசுக் கட்சியினரை கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க செனட்டில் அறிமுகமான ‘ரஷ்யா மீதான தடைகள் மசோதா‘
குடியரசுக் கட்சி செனட்டர் மறைந்த லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோரால் முன்மொழியப்பட்ட ரஷ்யா மீதான தடைகள் மசோதா, 100 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 60-க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்களின் ஆதரவுடன் கடந்த வாரம் அமெரிக்க செனட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரு கட்சி ஆதரவு பெற்ற லிண்ட்சே கிரஹாம், ரஷ்யா மீதான தடைகள் சட்டம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரியை விதிக்க முற்படுகிறது. ஆனால், எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அத்தகைய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கிறது.
தற்போது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்கும் முக்கிய நாடுகள் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகும்.
மசோதாவில் ஈரானை சேர்க்க வலியுறுத்திய ட்ரம்ப்
இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் நேற்று பதிவிட்ட ட்ரம்ப், "குடியரசுக் கட்சியினர் ரஷ்யா மீதான தடைகள் மசோதாவில் ஈரானையும் சேர்க்க வேண்டும். லிண்ட்சே அதைத்தான் செய்ய விரும்பினார், அது நடந்தும் இருந்தது," என்று கூறியிருந்தார்.
இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட தற்போதைய மசோதாவில், ஈரானைச் சேர்ப்பதில் ஜனநாயகக் கட்சியினர் அதிக ஆர்வம் காட்டவில்லை.
மசோதா குறித்து செனட்டர்கள் கூறுவது என்ன.?
கடந்த வாரம் அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, ரஷ்யாவின் அரசியல் தலைமை, நிதி நிறுவனங்கள், எரிசக்தித் துறை மற்றும் தடைகளைத் தவிர்ப்பதற்கான வலையமைப்புகள் ஆகியவற்றின் மீது கட்டாயத் தடைகளை விதிப்பதன் மூலம், உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கும் வருவாயை விளாடிமிர் புதினுக்கு கிடைக்காமல் தடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமென்டல் கூறினார்.
இருப்பினும், ஈரான் குறித்து அவர் கூறுகையில், “அதிபருக்கு உரிய மரியாதையுடன், அவர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். என் பார்வையில், இதை மற்ற சாத்தியமான இலக்குகளுக்குத் திறந்துவிடுவதை விட, நாம் இந்த மசோதாவுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.” “அதிபர் முன்மொழிய விரும்பும் வேறு மசோதாக்கள் இருந்தால்... நாங்கள் அவற்றை கருத்தில் கொள்வோம். ஆனால், இந்த மசோதா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, மிகுந்த சிரமத்துடனும், சில சமயங்களில் வேதனையுடனும், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உருவாக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று கனெக்டிகட்டைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கூறினார்.
மசோதாவில் எந்தெந்த நாடுகளுக்கு விலக்கு.?
இந்த மசோதாவின்படி, ரஷ்யாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதிகளை குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் நாடுகளுக்கு இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.
மேலும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒவ்வொரு 180 நாட்களுக்கும் முதல் ஐந்து வாங்குபவர்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், வாங்கும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் சுங்க வரி விகிதங்களைச் சரிசெய்யலாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மசோதா, அமெரிக்கா தனது அணு உலைகள் மற்றும் மருத்துவ ஐசோடோப்புகளின் தேவைகளுக்காக ரஷ்ய யுரேனியத்தைக் கொள்முதல் செய்வதிலிருந்தும் விலக்கு அளிக்கிறது. மேலும், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் இந்த மசோதாவின் விதிகள் பொருந்தாது.
இந்தியாவின் நிலை என்ன.?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறவழி உள்கட்டமைப்பு வழியாக வரும் விநியோகங்கள் கூடுதல் விநியோகப் பாதுகாப்பை வழங்குகின்றன என்று ஜூலை 9 அன்று ஒரு கெப்ளர் ஆய்வாளர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், சுத்திகரிப்பு ஆலைகள் விநியோகத்தை வலுப்படுத்த முற்பட்டதால், ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 4.93 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற சாதனை அளவை எட்டியது.
மேலும், எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டாலும், ஈரானிய கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க விநியோக ஆதாரமாக உருவெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று கெப்ளர் ஆய்வாளர் கூறினார். இந்த நிலையில், ரஷ்யாவுடன் ஈரானையும் இந்த மசோதாவில் சேர்க்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு வரிச்சுமை அதிகமாகும் என்றே கருதப்படுகிறது.
ஏற்கனவே முன்மொழியப்பட்ட 500% வரி
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிரஹாம் மற்றும் ப்ளூமென்டால் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவின் முந்தைய பதிப்பு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குபவர்கள் மீது 500 சதவீத வரியை விதிக்க முயன்றது.
மசோதாவின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, லிண்ட்சே கிரஹாம் தனது மரணத்திற்கு முன்பு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, திருத்தப்பட்ட வரைவிற்கு வெள்ளை மாளிகையின் ஒப்புதலைப் பெற்றார்.
திருத்தப்பட்ட மசோதாவானது, “ரஷ்யாவின் எண்ணெய் தடைகளைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் ஐந்து நாடுகள் மீது 100 சதவீதம் வரை சுங்க வரிகளை விதிக்க புதிய அதிகாரத்தைச் சேர்க்கிறது,” “மற்ற தடைகள் சட்டங்களுக்கு இணங்க தேசிய நலன் சான்றிதழைக் கோரும் வகையில் விலக்கைப் புதுப்பிக்கிறது,”.
இதனிடையே, ஜூலை 11 அன்று கிரஹாம் இறந்த பிறகு, அவரது சகோதரி டார்லைன் கிரஹாம், தனது சகோதரரின் பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்திற்குப் பணியாற்ற அமெரிக்க செனட்டராக நியமிக்கப்பட்டார். டார்லைன், ஜூலை 16 அன்று புளூமெந்தாலுடன் இணைந்து செனட்டில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.











