ஜூலை 22, 2026: வளர்ச்சி அடைந்த இந்தியா (விக்சித் பாரத்) இலக்கை நோக்கி, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சமூக நலன் உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர்
நரேந்திர மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி:
அப்போது பேசிய பிரதமர், அனைத்து சீர்திருத்தங்களின் மையமாக மக்களின் நலன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!”.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி!
அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் பயணத்தை விரைவுபடுத்துவதே சீர்திருத்தங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்தவும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்காலத் தேவைகளை விரிவாக மதிப்பிடவும் அவர் அறிவுறுத்தினார்.
‘விக்சித் பாரத்’ கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்:
நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், ‘விக்சித் பாரத்’ கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும், இளைஞர்கள் இந்தப் பார்வையின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை பணிகளில் 50% இடஒதுக்கீடு.. தளர்வுகள் என்ன?
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் கூறினார். மேலும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்புகளுக்காக உலகளாவிய திறன் தேவைகளை மதிப்பிட வேண்டும்:
விவசாயிகள் மத்தியில் பிரதமர் குசும் திட்டம் போன்ற திட்டங்களின் பரவலான பயன்பாடு வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்கால வேலைவாய்ப்புகளுக்காக உலகளாவிய திறன் தேவைகளை மதிப்பிடவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொண்டனர். விக்சித் பாரத் இலக்கை நோக்கி செயல்படுத்தல், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.














